அழகின் நிறம் சிவப்பு தான் என்று எந்த விஞ்ஞானமும் சொன்னதில்லை. ஆனால், ஆரோக்கியமான நிறம் கருப்பு தான் என்று பல விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என்பது இயற்கை. அதை, அப்படியே ஏற்பது தான் நியாயம். அதை விட்டு விட்டு கருப்பு நிறமாக இருந்தால் தவறு, அசிங்கம், அவலட்சணம் என்று பேசுவது, நடத்துவது முட்டாள்தனம். கருப்பு என்பது, ஒரு நிறமே. அதை வெளுப்பாக்குகிறேன் என்று கூறிக் கொண்டு, இயல்பாக இருக்கும் இயற்கை அழகைக் கெடுக்கும் விதத்தில் தங்கள் தோற்றத்திற்கும், உருவத்திற்கும் பொருந்தாத விதத்தில் ஒப்பனை செய்து கொள்வதும் சரியில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு சாதாரண பிளேடு விளம்பரத்திலிருந்து நகை, உடை என எந்த விளம்பரமானாலும், வெள்ளையான பெண்கள் தான் ஜெய்க்கிறார்கள். மற்றவர்களால் கருப்பு நிறப் பெண்கள் புறக்கணிக்க படுகிறார்கள். ஆனால் இதெல்லாம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கிவிட்டன. கருப்பு நிறப் பெண்கள் இந்த சமுதாயத்தில் கலக்க துவங்கிவிட்டனர். சிவப்பு பெண்கள்  தான் அழகு, கருப்பு அழகல்ல என்ற கருத்தை பரப்பும் எந்த செய்தியையும், விளம்பரப் படத்தையும் பார்க்க நேரிட்டால் சிரித்து விட்டு கடந்து போய்விடுங்கள்.  


இரசாயன கலந்த கீரீம்களை பயன்படுத்த ஆரம்பித்தால் ஒரு பலனும் கிட்டாது. மெல்ல மெல்ல நமது தோலின் `மெலன்` உற்பத்தியைக் குறைக்கும் அல்லது நிறுத்தி விடும். இயற்கையான அழகை கெடுத்துவிடும். எனவே உங்களை சிவப்பாக, வெள்ளையாக மாற்றிவிட முடியும் என்ற விளம்பரங்களை நம்புவதற்கு பதில் நம் நிறம் இதுதான், இதை எப்படி மேம்படுத்திக் கொள்வது, மேலும் அதிகமாகாமல் காப்பது எப்படி என புத்திசாலித்தனமாக யோசித்து முடிவெடுங்கள். கருப்பு நிற பெண்கள் எந்தவித குழப்பத்துக்கும் ஆளாகாமல் தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்து, உண்மையாக முன்னேற்றப் பாதையில் கவனம் செலுத்த வேண்டும். அழகா, ஆரோக்கியமா என்ற முடிவு உங்கள் கையில்...


நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா? ஒல்லியாக மாற்ற முடியும். நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்களா? குண்டாக மாற்ற முடியும். நீங்கள் கருப்பாக இருக்கிறீர்களா? வெள்ளையாக மாற்ற முடியாது. விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்... வெற்றி நடை போடுங்கள்.