கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டு அதற்கு பதில் புதிய ரூ.2000 நோட்டுகள் பொதுமக்கள் புழக்கத்துக்கு வினியோகிக்கப்பட்டன. பின்னர் வங்கிகளில் பணம் போடப்படுவது மற்றும் எடுப்பது போன்ற பணபரிவர்த்தனைகளை வருமானவரித்துறை கண்காணித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் 2017-ம் ஆண்டு நிதி சட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடை நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.


அதன்படி வருமானவரிச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் 269-எஸ்.டி. பிரிவில் ஒரே நாளில் மேற்கண்ட தொகையை ஒரே பரிவர்த்தனையாகவோ அல்லது ஒரு நிகழ்ச்சி தொடர்பான பரிவர்த்தனைக்கோ அல்லது தனிநபருக்கு அளிப்பதற்கோ தடைவிதித்துள்ளது.


எனவே ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100% தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வருமானவரித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 



வருமான வரிச்சட்டத்தின் 269-எஸ்.டி. பிரிவை மீறுவோருக்கு, அவர் எவ்வளவு தொகையை ரொக்கமாக பெறுகிறாரோ, அதே தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.