மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் இன்று காலை ஆளுநர் கோஷ்யாரி, முதலமைச்சர் பட்னாவிஸ் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டையே உலுக்கிய மும்பை தாக்குதலின் 11 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, மும்பையில் உள்ள காவலர் நினைவிடத்தில் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கடல்வழியாக கையெறி குண்டுகள் மற்றும் நவீன ரக துப்பாக்கிகளுடன், மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் நகரின் முக்கிய 8 இடங்களை குறி வைத்து கொடூர தாக்குதல் நடத்தினர். சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் கொடூரமான தாக்குதலை நடத்தினர். இந்த வெறியாட்டத்தில் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபட்டனர். தீவிரவாதிகளின் கோர தாண்டவத்தில் சிக்கிய வெளிநாட்டினர் உள்பட சுமார் 166 பேர் தங்கள் உயிரை விட்டனர். 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை அவர்களின் வெறியாட்டம் தொடர்ந்தது.


பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து நடத்திய பல்வேறு கட்ட அதிரடி நடவடிக்கைகளின் பலனாக 10 தீவிரவாதிகளில் 9 பேர் வீழ்த்தப்பட்டனர். இறுதியாக அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். விசாரணைக்கு பிறகு அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கசப்பிற்கு கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. உலகை உலுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது. இந்திய வரலாற்றில் இந்த சம்பவம் ஆறாத சோக வடுவாக பதிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.