புதுடெல்லி: காங்கிரஸ் (Congress) கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு சிரமங்கள் அதிகரித்து வருகின்றன. காங்கிரஸ் முக்கிய மற்றும் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் (P Chidambaram) மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவகுமார் போன்ற தலைவர்கள் தற்போது சிறையில் உள்ளனர். அதேபோல சோனியா காந்தி (Sonia gandhi) மற்றும் ராகுல் காந்தி (Rahul gandhi) ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த சூழ்நிலையில், தற்போது மத்திய பிரதேச முதல்வரும், காங்கிரசின் முக்கிய தலைவராக பார்க்கப்படும் கமல்நாத்துக்கு சிக்கல் அதிகரிக்க உள்ளது. அதாவது 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கிய எதிர்ப்பு கலவர சம்பவத்தில் தொடர்புடைய மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் (Kamal Nath) மீதான வழக்கு விசாரணை மீண்டும் கையில் எடுக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை டெல்லியைச் சேர்ந்த ஷிரோமணி அகாலிதள எம்.எல்.ஏ. மஞ்சீந்தர் சிங் சிர்சா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது ட்வீட்டில், 'அகாலிதளத்திற்கு ஒரு பெரிய வெற்றி. 1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதில் கமல்நாத் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகளை எஸ்ஐடி (SIT) மீண்டும் விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு நான் உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தேன். அதன் பின்னர் கமல்நாத்துக்கு எதிரான சமீபத்திய ஆதாரங்களை கருத்தில் கொண்டு வழக்கு எண் 601/84 ஐ மீண்டும் விசாரிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விரைவில் உங்களை (கமல்நாத்) நான் சிறையில் சந்திக்க உள்ளேன் எனகக் கூறியுள்ளார்.


மேலும் மற்றொரு ட்வீட்டில், "வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்த எஸ்ஐடிக்கு நன்றி. கமல்நாத் சீக்கியர்களைக் கொன்றதை நேரில் பார்த்தவர்களிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர்கள் முன் வந்து சாட்சிகளாக மாறுமாறு கேட்டுக்கொள்கிறேன். பயப்படத் தேவையில்லை எனக் கூறியுள்ளார்.


மத்திய பிரதேச முதல்வராக உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் மீதான வழக்கும் மீண்டும் உள்துறை அமைச்சகம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதால், ஒருவேளை அவர் மீதான குற்றம் நிருப்பிக்கப்பட்டால், அவர் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்ப்படும். இதனால் அவரின் முதல்வர் பதவிக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகலாம்.