2002 குஜராத் கலவர வழக்கில் மோடி உள்ளிட்டோரை விடுவித்ததை எதித்த வழக்கு ஒத்திவைப்பு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2002 குஜராத் கலவர வழக்கில், அப்போது மாநில முதலமைச்சராக இருந்த மோடி உள்ளிட்டோரை விடுவித்ததை எதித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, வரும் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தின்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


அகமதாபாத்தில் குல்பர்கா சொசைட்டி என்ற குடியிருப்பில் 69 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான இஷான் ஜாஃப்ரியும் கொல்லப்பட்டார். இதனிடையே, குஜராத் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு கூறியதன் அடிப்படையில், அவர்கள்  விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து, கலவரத்தின்போது கொல்லப்பட்ட இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாக்கியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.


இந்த மனு ஏற்கெனவே நவம்பர் 19 ஆம் தேதியும் அதன் பிறகு நவம்பர் 26 ஆம் தேதியும் விசாரணைக்கு வந்து ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஜனவரி 3 ஆவது வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.