ராஜஸ்தானில் சொகுசு கார் மோதி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காரை ஓட்டிய எம்.எல்.ஏ.வின் மகன் பாரில் மது அருந்தியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் கடந்த 2-ம் தேதி அதிகாலை சுமார் 2 மணி அளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜன்பத் மார்க் பகுதியை நோக்கி  பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று மிகவும் வேகமாக வந்தது. அந்த கார் திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. பின்னர் அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த போலீசாரின் வேன் மீதும் பலமாக மோதியது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேனில் இருந்த 4 போலீசார் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மான்சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 


இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த காரை ஓட்டி வந்தது சிகார் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நந்த் கிஷோர் மகரியாவின் மகனான சித்தார்த் மகரியா என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சித்தார்த் மகரியாவும், அவருடன் காரில் வந்த நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போதையில் இருந்தனர் என்பது மறுக்கப்பட்டது.


இப்போது அவர்கள் மதுபோதையில் இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக வீடியோ வெளியாகி உள்ளது. ஓட்டலில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி.யில் விபத்து நடைபெறுவதற்கு முன்னதாக சித்தார்த் மகரியா தன்னுடைய நண்பர்களுடன் பாருக்கு சென்று மது அருந்திய காட்சிகள் பதிவாகிஉள்ளது. போலீசார் சோதனை நடத்திய போதும் அவர் அதிகளவு மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


அரசியல்வாதியின் மகன் கூறுகையில்:- மழை மற்றும் சாலையில் வெளிச்சம் இல்லாததே விபத்திற்கு காரணம். ஆட்டோவும் மிகவும் வேகமாக திரும்பியது என்று கூறினார். இந்நிலையில் அவர் மது அருந்திருந்தார் என்பதற்கு ஆதாரமாக வீடியோ வெளியாகி உள்ளது.