உ.பி. மதரசாவில் 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கி இருந்த 4 பேர் கைது
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த மியான்மர் நாட்டை சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஷாம்லி: உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தின் ஜலாலாபாத்தில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரும் மியான்மரில் வசித்து வருவதாகவும், இங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு மதரஸா அவர்களுக்கு இங்கு இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டில் மதரஸாவின் மூன்று ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (திங்ககிழமை) கைது செய்யப்பட்ட நான்கு வெளிநாட்டினர் மியான்மரைச் சேர்ந்தவர்கள். சந்தேகத்திற்கிடமான அவர்களின் விசாக்கள் மற்றும் பாஸ்போர்ட் கிடைத்துள்ளன.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த வெளிநாட்டு பிரஜைகள் அனைவரும் பல ஆண்டுகளாக ஷாம்லி மதர்சாவில் படித்து வந்தனர். தற்போது இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஷாம்லி போலீஸ் சூப்பிரண்டு அஜய் குமார் கூறுகையில், விசா காலம் முடிந்தும் இந்த நான்கு பேரும் சட்டவிரோதமாக நாட்டில் வசித்து வருவதாகவும், அவர்கள் பாஸ்போர்ட், ஆதார் அட்டைகள் போன்ற போலி இந்திய அடையாள ஆவணங்களை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிஸ்வான், நோமன், ஃபுர்கான் மற்றும் அப்துல் மஜித் ஆகிய நான்கு பேரும் நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வருவதாகவும், உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நான்கு பேருக்கு சட்டவிரோதமாக தங்குமிடம் அளித்த வழக்கில் மதரஸாவைச் சேர்ந்த அஷ்ரப் ஹொசைன், ஹனிஃபுல்லா, வாசிப் ஆகிய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷம்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது விசாரணை நடத்தப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
புலனாய்வு மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது காவல்துறை வழக்குத் தாக்கல் செய்துள்ளது.