பழைய நோட்டுகள் வைத்திருந்தால் 4 ஆண்டு சிறை
பழைய நோட்டு தொடர்பாக இன்று அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி: பழைய நோட்டு தொடர்பாக இன்று அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான கால அவகாசம் வருகிற 30-ம் தேதியுடன் முடிகிறது.
அதன்பின்னர் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் அவசர சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இது குறித்து இன்று நடைபெறும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என கூறப்பட்டது.
அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் தலா 10 எண்ணிக்கைக்கு மேல் வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் சட்டவிரோதம் என அவசரச் சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்கு பின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினால் அபராதம் விதிக்கவும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செல்லாத 500,1000 ரூபாய் 10 நோட்டுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு ரூ.50000 அல்லது வைத்திருக்கும் பணத்தின் மதிப்புக்கு 5 மடங்கு இதில் எது பெரிய தொகையோ அந்த அளவு அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது. செல்லாத நோட்டுகளை மார்ச் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்வதற்கான கால அவகாசமும் இருக்கிறது.