நேர்மையான அரசியலுக்காவே சோ போராடினார்: மோடி

சென்னையில் 'துக்ளக் இதழ்'' 47-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துக்ளக் ஆண்டு விழாவில் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பொங்கல் நல்வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தமிழில் தெரிவித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சூரிய கடவுளுக்கு நன்றி சொல்லும் விழாவே பொங்கல். இயற்கையோடு ஒன்றிணைந்த கலாச்சாரமே நமது நாட்டிற்கே வலுசேர்க்கிறது.
சோ இல்லாத துக்ளக் பத்திரிகையை நினைத்து பார்க்க முடியவில்லை. நேர்மையான, ஊழலற்ற அரசியல் கொள்கைக்காகவே "சோ" போராடினார். பன்முக திறமை கொண்ட நபர்தான் சோ. அவரை போல ஒருவரை நான் கண்டதில்லை. சோவின் பணியை தொடர, குருமூர்த்தி மற்றும் அவரது குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் விமர்ச்சித்தவர். விமர்ச்சிக்க கடினமான விசயங்களையும் ஒரே வரி, கருத்து சித்திரம் மூலம் எளிதாக புரிய வைத்தவர். விமர்ச்சிக்கப்பட்டவர்கள் கூட விரும்பும் தன்மை கொண்டவர். சோவின் விமர்சனத்தை தவிர்த்துவிட்டு இந்திய அரசியல் வரலாற்றை எழுத முடியாது. நேர்மையான, ஊழலற்ற அரசியல் கொள்கைக்காகவே போராடியவர்.
இவ்வாறு பேசினார்.