விவசாயக் கடன் தள்ளுபடி மூலம் 60 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்திருப்பதாகவும், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தவறானது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று அக்கட்சி ஆளும், அல்லது கூட்டணி அமைத்துள்ள மாநிலங்களிலும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


இவற்றை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரசின் நடவடிக்கை கண்துடைப்பு என்றும், அதனால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.


இதற்கிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ''அரசின் கவனம் தங்கள் பக்கம் திரும்பவேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர். ஆனால் கர்நாடக அரசு திமிர்த்தனமாக நடந்து வருகிறது. சாதாரண மக்கள் வளர்ச்சியை விரும்புகின்றனர். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு பரம்பரை மட்டுமே செல்வச் செழிப்புடன் இருக்க விரும்புகின்றனர். கர்நாடக அரசின் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் என்பது மிகப்பெரும் நகைச்சுவை'' என்று பேசினார்.


இதற்கு பதிலளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, விவசாயக் கடன் தள்ளுபடி  மூலம் 60 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பான விவரங்கள அனைத்தும் அரசு இணையதளத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், வரி செலுத்துவோரின் பணத்தை தமது அரசு மிகவும் கவனமாக கையாள்வதாகவும் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.