5 ஆண்டுகளில் 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள்; மோடி தியானத்தில் இருந்தாரா? ராகுல்
பிரதமர் மோடி தனது காதுகளை திறந்து நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கேட்க வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடில்லி: இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த குண்டுவெடிப்பு விவகாரம் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் பிரதமர் மோடி, கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி கர்நாடகாவில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்க்கொண்டார். அப்பொழுது பெங்களுரு கூட்டத்தில் பேசிய மோடி, 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்கப்படவில்லை எனக் கூறினார்.
ஆனால் பிரதமர் மோடி கூறியது "பொய்" எனவும், 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தால் 451 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 1,589 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் FactChecker செய்தி ஊடகம் ஒரு கட்டுரையை வெளியிட்டது.
அந்த கட்டுரையை மேற்கோள் காட்டி, பிரதமரின் பேச்சுக்கு பதிலடி தந்துள்ளார் ராகுல்காந்தி.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்கப்படவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் புல்வாமா, பதான்கோட், உரி மற்றும் காட்ரோரோலி மற்றும் 942 பிற முக்கிய குண்டுவெடிப்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்துள்ளது. பிரதமர் மோடி தனது காதுகளை திறந்து நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கேட்க வேண்டும்." என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.