ராஜ்யசபா தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் பெங்களூரு ஈகிள்டன் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் குஜராத் திரும்பினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களை விமான நிலையத்தில் அகமது படேல் வரவேற்றார். தேர்தல் நடைபெறும் வரை எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தில் சிக்கிவிடாமல் இருக்க பாதுகாப்பாக தக்கவைக்கப்பட்டுள்ளனர். 


மேலும் குஜராத்தில் மூன்று ராஜ்சபா எம்.பிக்களுக்கான தேர்தல் நாளை நடக்கிறது. பாஜக சார்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சோனியாகாந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது. அதே சமயம் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த பல்வந்தர் சிங் ராஜ்புத் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். 


காங்கிரசை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளதால் எஞ்சியிருக்கும் எம்எல்ஏக்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களை பெங்களூருவிற்கு காங்கிரஸ் அழைத்துச் சென்று ஈபிள்டன் ரிசார்ட்டில் தங்க வைத்தது. நாளை ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஒருவார கால ராஜ உபசாரத்திற்குப் பிறகு பெங்களூரிலிருந்து பலத்த பாதுகாப்புடன் 44 எம்.எல்.ஏ.க்கள் அகமதாபாத் திரும்பினர்.


விமான நிலையத்தில் எம்எல்ஏக்களை ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அகமது பட்டேல் வரவேற்றார். அனைத்து எம்எல்ஏக்களும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ராஜ்யசபா தேர்தலையொட்டி பாஜகவினருடன் தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அகமதாபாத் திரும்பியுள்ள நிலையில் அடுத்த கட்ட அரசியல் பரபரப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளது.