இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பாஜக தன்னால் முடிந்த அளவுக்கு மோசமான அரசியலை செய்யும்: ஆம் ஆத்மி
டெல்லியில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பாஜக தன்னால் முடிந்த அளவுக்கு மோசமான அரசியலை செய்யும் என ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
புது டெல்லி: ஷாஹீன் பாக் நகரில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி CAA-வுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் இடத்திலிருந்து சிறிது தொலைவில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குர்ஜார் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்றும், அதற்கான ஆதாரங்கள் விசாரணையின் போது கிடைத்துள்ளது என்றும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளது. டெல்லி போலிசாரின் அறிக்கையை அடுத்து, கோவத்தின் உச்சிக்கு சென்ற ஆளும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், இது பாஜக சதி என்றும், இந்த மாதிரி கேவலமான அரசியலை பாஜகவால் தான் செய்ய முடியும் என்று காட்டமாக பதில் அளித்துள்ளனர்.
டெல்லி காவல்துறை அளித்த அறிக்கையில் படி, கைது செய்யப்பட்ட கபில் குஜ்ஜ ஆம் ஆத்மி கட்சியின் (AAP) உறுப்பினர். குற்றம் சாட்டப்பட்ட கபில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுடன் இருக்கும் புகைப்படம், அவரது மொபைலில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. மேலும் அவர் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததாக ஒப்புக் கொண்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த குற்றசாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. மேலும் இது பாஜகவின் கேவலமான அரசியல் என்றும் கூறியுள்ளது. டெல்லி காவல்துறை அறிக்கையை அடுத்து, உடனேயே, ஆம் ஆத்மி கட்சி இதை பாஜக சதி என்று அழைத்தது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், "அமித் ஷா தற்போது நாட்டின் உள்துறை அமைச்சராக உள்ளார். தேர்தல் நடைபெற சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் புகைப்படம் மற்றும் சதிக்குறித்து கண்டுப்பிடிக்கப்படும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3-4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பாஜக தன்னால் முடிந்த அளவுக்கு மோசமான அரசியலை செய்யும். ஒருவருடன் படத்தில் இருந்தால், அதற்கான அர்த்தம் இதுதானா? எனவும் கேள்வி எழுப்பினார்.
டல்லூபுராவில் வசிக்கும் கபில், துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, சம்பவ இடத்தில் "ஜெய் ஸ்ரீ ராம்: என்று கோஷங்களை எழுப்பினார், மேலும் இந்துக்கள் மட்டுமே இங்கு குரல் எழுப்புவார்கள் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி சூடு நடத்தி கைதான கபில் ஞாயிற்றுக்கிழமை பெருநகர நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பிறகு அவரை இரண்டு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பியது நீதிமன்றம்.
ஷாஹீன் பாக் நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்குப் பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைநகரின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்து பேசினார். தற்போது குர்ஜார் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் என்ற தகவலுக்கு பிறகு, டெல்லியின் ஆளும் கட்சியை பிரசாரத்தில் பாஜக கடுமையாக தாக்க செய்யும்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.