வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு விலை உயர்வைத் தொடர்ந்து தற்போது சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை அதிகரித்து, உச்சத்தில் உள்ளது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை   அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தில் இருக்கிறது. விலையை குறைக்க பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. துருக்கி, எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சந்தைக்கு வந்திருந்தாலும் வெங்காயத்தின் விலை அதிகமாகவே இருக்கிறது.


அந்தவகையில் தற்போது இந்த வரிசையில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.


பாமாயில் விலை கடந்த இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.20 (35 சதவிகிதத்துக்கும் அதிகமாக) அதிகரித்துள்ளது. மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து அதிக விலைக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதன் காரணமாக மேலும் விலை அதிகரிக்கலாம் என்று எண்ணெய் - விதை சந்தை நிபுணர் சலில் ஜெயின் ஐஏஎன்எஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் உலகிலேயே சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகளவாகும். இந்த இறக்குமதி மூலம் அதன் சமையல் எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட ரபி எண்ணெய் விதை, சாகுபடியை விடவும் குறைவாக இருப்பதாலும், வெளிநாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.


அர்ஜென்டினாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சோயா எண்ணெய் மீதான வரி அதிகரிப்பு, இந்தியாவில் சோயா எண்ணெய் இறக்குமதியின் விலையை அதிகரிக்கும். அர்ஜென்டினா சோயா எண்ணெய் மீதான ஏற்றுமதி வரியை 25 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. 


கடந்த வாரம் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எண்ணெய் விதை பயிர்களின் பரப்பளவு இந்த ஆண்டு 68.24 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.47 லட்சம் ஹெக்டேர் குறைவு.