பாதுகாப்பு மந்திரியிடம் கேள்வி கேட்பதன் மூலம் பெண்களை அவமதிக்கிறார் ராகுல்: மோடி
நீங்கள் நாட்டின் பாதுகாப்பு மந்திரியான ஒரு பெண்ணை அவமதிக்கவில்லை, நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் அவமதித்து உள்ளீர்கள் என ஆக்ரா பொதுகூட்டத்தில் மோடி பேச்சு.
இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல வர உள்ளதால், தங்கள் கட்சிக்கு ஆதரவை பெறுவதற்காக நாடு முழுவதும் பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின் போது பல திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டார். ஆக்ராவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்பொழுது அவர், உத்தரப் பிரதேச மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைக்க வேண்டும். அப்பொழுது தான் நான் உங்களுக்கு சேவை செய்ய முடியும்.
ஆக்ரா மக்களுக்காக சுமார் ரூ. 3.50 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் ஆக்ரா "ஸ்மார்ட்-சிட்டி" ஆக மாற்றப்படும். ஜிஎஸ்டி வரும் நாட்களில் இன்னும் சிறப்பனதாக மாற்றப்படும்.
சில கட்சிகள் இதற்கு முன்பு ஓட்டுக்காக ஏழைகளுக்கு திட்டங்களை அறிவிக்கும். அதை நிறைவேற்றாது. ஆனால் நாங்கள் 10% இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றி உள்ளோம். இது இந்திய வரலாற்றில் முக்கியமானது ஆகும். சொக்கித்தாரை (பிரதமர் மோடி) பார்த்து மற்ற கட்சியினர் நடுங்குகிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்த்து இருப்பீர்கள். நாட்டின் முதல் முறையாக ஒரு பெண் பாதுகாப்பு மந்திரியாக உள்ளார். இது எவ்வளவு பெருமை. ஆனால் எதிர்கட்சிகள் மக்களவையில் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்தார். ஆனாலும் அவரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்ட வண்ணம் இருந்தனர். ஒரு பெண் என்றும் பாராமல், அவரிடம் கேள்வி கேட்டு சிரமத்துக்கு உள்ளாகினர்.
எதிர்கட்சி தலைவர் ஒன்றை தெரிந்துக்கொள்ளுங்கள், நீங்கள் நாட்டின் பாதுகாப்பு மந்திரியான ஒரு பெண்ணை அவமதிக்கவில்லை, நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் அவமதித்து உள்ளீர்கள். இதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.