புதுடில்லி: லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவஹாத்தி ஆகிய விமான நிலையங்களை தனியார் மயமாக்கப்படுகிறது என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமான நிலையங்களை தனியார்மயமாக்கலுக்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு செல்வதாக அறிவித்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) ஊழியர்களின் எச்சரிக்கையை மீறி நாட்டின் ஆறு விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மோடி அரசு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. 


இன்று மாநிலங்களவையில் பேசிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி கூறுகையில், ''நாட்டின் ஆறு விமான நிலையங்களை நிர்வகிக்க தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பொது-தனியார் கூட்டு (Public–private partnership) முயற்ச்சி மூலம் செயல்படும் எனக் கூறினார். அதில் லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவஹாத்தி ஆகிய விமான நிலையங்களை தனியார்மயமாக்கப் படுகிறது எனக் கூறினார். 


இதன் மூலம் இது ஏஏஐ மற்றும் விமான பயணிகளுக்கு பயனளிக்கும் என்றும், தனியார் நிர்வகிக்கப்பட்டு வரும் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களின் உதாரணங்களையும் மத்திய அமைச்சர் மேற்கோள் காட்டினார். 


இதுவரை அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த விமான நிலையங்கள் இப்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதால் அதில் பணிபுரியும் பணியாளர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு செல்வதாக அறிவித்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) ஊழியர்களின் எச்சரிக்கையை மீறி நாட்டின் ஆறு விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது.


டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் 2006 ஆம் ஆண்டு தனியார்மயமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.