சிவசேனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர் இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட்டிற்கு ‘இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு’ தடை விதித்து உள்ளது. இப்பிரச்சனையை முன்வைத்து பாராளுமன்றத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். 


இதற்கிடையே, சிவசேனா எம்.பி.க்கள் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனை நேற்று அவரது அறையில் சந்தித்து பேசினார்கள். 


இதைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன மேலாளரை அடித்ததற்கு வருத்தம் தெரிவித்து சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூவுக்கு சிவசேனா எம்.பி. ரவீந்திர கெயிக்வாட் கடிதம் எழுதினார். 


அந்த கடிதத்தில், கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டமானது என்றும், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி உள்ளார். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுவதை யாரும் விரும்புவதில்லை என்றும், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் நடந்த சம்பவத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார். 


இதையடுத்து, சிவசேனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஏர் இந்தியா நிறுவனம் சிவசேனா எம்.பி கெய்க்வாட் விமானத்தில் பறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.