விமான சேவை துவங்கிய முதல் நாளிலேயே 58,318 பேர் சொந்த இடங்களுக்கு பயணம்...
லாக்டவுனுக்கு பிறகு விமானச்சேவை அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் பயணிகள் விமானங்களில் 58,318 பேர் பயணம் மேற்கொண்டனர்...
லாக்டவுனுக்கு பிறகு விமானச்சேவை அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் பயணிகள் விமானங்களில் 58,318 பேர் பயணம் மேற்கொண்டனர்...
புதுடெல்லி: பயணிகள் விமானம் மீண்டும் செயல்பட தொடங்கிய முதல் நாளன்று 58,318 க்கும் மேற்பட்ட பயணிகள் தாங்கள் செல்ல விருப்பப்பட்ட ஊர்களுக்கு பயணித்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.
திங்களன்று 832 விமானங்கள் இயக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்
கொரொனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் பாதித்து, பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்ட உள்நாட்டு பயணிகள் விமானங்கள் மே 25, திங்கள்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கின. சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் பரிந்துரைத்த கடுமையான விதிமுறைகளை அனுசரித்து, முதல் விமானம் திங்களன்று டெல்லியில் இருந்து புனேவுக்கு அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டது, அதே சமயத்தில் மும்பையில் இருந்து முதல் விமானம் காலை 6.45 மணிக்கு பாட்னாவுக்கு கிளம்பியது.
மேற்கு வங்க மாநிலமும் ஆந்திராவும் தங்கள் விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகளை அனுமதிப்பதற்கு தயக்கம் காட்டியதை அடுத்து திங்களன்று 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று (மே 26) முதல் ஆந்திராவில் விமானச் சேவைகள் தொடங்கியுள்ளதாகவும், எனவே விமானச் சேவைகள் அதிகரித்துள்ளதாகவும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, செவ்வாயன்றுமேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்நாட்டு விமானச் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. மேற்கு வங்கத்தில் மே 28 முதல் பயணிகள் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கும். அரசாங்கம் வழங்கிய ஆலோசனையின்படி, மே 28 முதல் மாநிலத்தில் உள்நாட்டு விமானங்கள் அனுமதிக்கப்பட்டவுடன் மேற்கு வங்கத்திற்கு வரும் மக்கள் கடந்த இரண்டு மாதங்களில் கோவிட் -19 பாதிப்பு இல்லை என்று சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தபின்னர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி, அதை அழிப்பதற்காக நாடு முழுவதும் முடக்க நிலை எனப்படும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அனைத்துவித போக்குவரத்துச் சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில், விமானத் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்ட்து. இந்த நிலையில், வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் உள்நாட்டு விமான சேவைகளை மே 25 முதல் மீண்டும் தொடங்குவதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.
அதன்படி, பயணச் சீட்டின் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. பயணிகள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டது, விமானத்தில் உணவுப் பொருட்கள் எதுவும் பரிமாறப்படவில்லை. அதோடு, ஆரோக்யா சேது செயலியின் மூலம் பயணிகள் மருத்துவ நிலைமைகள் குறித்த விவரங்கள் பெறப்பட்டது, அதோடு சுய பிரமாண பத்திரம் போன்ற அறிவிப்பு படிவத்தை நிரப்ப வேண்டுவதும் கட்டாயமாக்கப்பட்டது.
- மொழியாக்கம்: மாலதி தமிழ்ச்செல்வன்.