கூட்டணி இல்லாதபோது நாங்களும் தனித்து போட்டியிடுவோம்: அகிலேஷ்
பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி முறியும் போது, நாங்களும் தனித்து இடைத்தேர்லில் போட்டியிடுவோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
புது டெல்லி: உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக மாயாவதி அறிவித்துள்ள நிலையில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி இல்லாத நிலை வரும் போது நாங்களும் தனித்துப் போட்டியிடுவோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
2019 மக்களவை தேர்தலில் உ.பி. மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அதில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. பி.எஸ்.பி 10 இடங்களிலும், எஸ்.பி 5 இடங்களிலும் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் எஸ்.பி மற்றும் பி.எஸ்.பி (SP-BSP) கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது.
இதுக்குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின்னர், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, "யாதவர்கள் சமுதாயம் ஓட்டு போடததால் தான் தோல்வி ஏற்பட்டது. அதனால் அவர்களுடன் (சமாஜ்வாதி கட்சி) கூட்டணி வைப்பது எந்தவித பயனும் இல்லை எனக் கூறினார். அதேபோல சமாஜ்வாதி கட்சியும் நாங்கள் தனித்து போட்டியிட்டு இருந்தால் அதிக அளவில் வெற்றி பெற்றிருப்போம் எனக் கூறினார்கள். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் 11 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
இதனையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி முறியும் போது, நாங்களும் தனித்து இடைத்தேர்லில் போட்டியிடுவோம் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.