இரண்டாவது நாளாக தொடரும் தமிழக விவசாயிகளின் போராட்டம்!
டெல்லி நாடாளுமன்ற தெரு காவல் நிலைய சாலையில் நடைபெறும் இப்போராட்டம் இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக தொடர்கிறது
கடந்த மாதம் 16-ஆம் நாள் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதின் படி, 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அதற்கான காலக்கெடு வரும் 29-ஆம் நாள் முடிவடைகின்றது.
இதனையடுத்து மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து விவசா சங்கத்தினரும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 29-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் நேற்று ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை ஏற்க உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
டெல்லி நாடாளுமன்ற தெரு காவல் நிலைய சாலையில் நடைபெறும் இப்போராட்டம் இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக தொடர்கிறது. முன்னதாக இப்போராட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை எனவும், பின்னர் அனுமதி பெறப்பட்டதாகவும் தெரிகிறது!