ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி என பல்வேறு மாநிலங்களின் முதல் மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இச்சம்பவத்துக்கு கடும் கண்டனமும் இரங்கலும் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதம்:-


‘அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட மிக கோரமான தீவிரவாத தாக்குதலில் பல யாத்ரீகர்கள் கொல்லப்பட்ட செய்தியை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன்.


வங்காளதேசத்தை பொருத்தவரை வன்முறை, தீவிரவாதம் ஆகியவற்றுடன் எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்வதில்லை என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது. இந்தியாவின் நெருங்கிய நட்புறவு கொண்டுள்ள அண்டை நாடு என்ற வகையில் இந்த பிராந்தியத்தில் இருந்து தீவிரவாத தொல்லையை ஒழிக்கும் பணியில் உங்களுடன் இணைந்து தொடர்ந்து ஒத்துழைத்து செயலாற்றுவோம்.


இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ 


என்று குறிப்பிட்டுள்ளார்.