குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) குறித்து நாடு தழுவிய சீற்றம் நாட்டை உலுக்கிய வரும் நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 30,000 தன்னார்வலர்களை நியமித்து, மேற்கு வங்காளத்தில் CAA குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று CAA பற்றி மக்களிடம் பேசுவதோடு அவர்களுக்கு சட்டத்தை குறித்து விளக்குவார்கள். இந்த முயற்சி ஜனவரி இறுதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயற்பாட்டுத் தலைவர் JP நாடாவுடன் சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக பாஜக-வின் பெண் பிரிவுடன் நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும், CAA-க்கு ஆதரவளிக்கும் பல கோடி மக்களின் கடிதங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்படும் என்றும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் வாழும் மக்களுக்கு CAA எந்த பாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று உறுதியளித்தார். பிரதமர் மோடி கூட குடியுரிமை (திருத்த) சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு குறித்து முஸ்லிம்களின் அச்சத்தை குறைக்கும் வகையில் பேசியிருந்தார். என்றபோதிலும் இவ்விரு நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தடையின்றி தொடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. இந்த போராட்டங்கள் பலரது உயிர்களைக் கொன்றுள்ளது, மேலும் பலரைக் காயப்படுத்தியுள்ளது.


திங்களன்று, பாஜக சமூக ஊடகங்களில் இரண்டு முஸ்லிம்கள் CAA மற்றும் NRC மற்றும் சட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்கும் ஒரு அனிமேஷன் வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோவில் பேசிக்கொள்ளும் கதாப்பாத்திரங்கள், சில அரசியல் கட்சிகள் தங்கள் தேவைக்காக CAA சட்டத்திருத்தை பயன்படுத்தி மக்களை போராட்டத்தில் ஈடுப்பட உட்படுத்துகின்றனர் என தெரிவித்தன. எனினும் மக்களிடையே CAA குறித்த அச்சம் விலகவில்லை. இந்நிலையில் CAA குறித்த முழு புரிதலை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக தற்போது தன்னார்வளர்களின் உதவியை நாடியுள்ளது.


முன்னதாக நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட போராட்டம் காரணமாக டெல்லியில் பிரிவு 144 அமுல் படுத்தப்பட்டது. மேலும் உத்தரபிரதேசத்தில் பல பகுதிகளில் பிரிவு 144 விதிக்கப்பட்டது, வன்முறை மேலும் பரவாமல் தடுக்க இணையத்திற்கும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.