தனியாக இரவில் சிக்கித் தவிக்கும் பெண்ணை நள்ளிரவில் இறக்கிவிட ஆந்திர போலீசார் ‘அபய்’ வசதியைத் தொடங்கியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: நாட்டில் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இரவு நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு உதவ ஆந்திர மாநில காவல்துறையினர் ‘அபய்’ என்ற பாதுகாப்பு திட்டத்தை தொடங்கியுள்ளனர். 


கடந்த மாதம் 27 ஆம் தேதி ஹைதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.


அந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சிவா,சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கை விசாரிக்க தெலுங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்திருந்தது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணியில் நடத்தினர்.


இந்நிலையில், இன்று காலை போலீசார் அவர்கள் நான்கு பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து, இரவு நேரத்தில் பெண்களை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல காவல்துறை சார்பில் அபேய் என்ற திட்டம் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக எட்டு கார்களும் 70 இருசக்கர வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 100 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்கும் பெண்களுக்கு, உடனடியாக வாகனங்களுடன் சென்று வீட்டிற்கு செல்ல உதவி செய்யப்படும்.


ஒவ்வொரு காரிலும் ஓட்டுனர் தவிர பெண் காவல் அதிகாரி உடலில் பொருத்தப்பட்ட கேமராவுடன் இருப்பார். இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இந்த பாதுகாப்பு சேவை தொடரும். இது குறித்து காவல் அதிகாரி கௌஸல் கூறுகையில்; அலுவலகங்கள், பயிற்சி மையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற போக்குவரத்து வசதிகள் தேவைப்படும் பாதுகாப்பற்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று கூறினார்.


“பெண்களிடமிருந்து அழைப்புகள் வந்த 10 நிமிடங்களுக்குள்‘ அபய் ’வாகனங்கள் அங்கு செல்வதை நாங்கள் உறுதி செய்வோம். அது முற்றிலும் இலவசம், ”என்று அவர் கூறினார்.