ஆந்திராவில் மூன்று தலைநகரத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலத்தில் தலைநகர் தொடர்பான பிரச்னை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆட்சியிலிருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியைத் தலைநகராக அறிவித்து அதை மேம்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டினார். ஆனால், அதற்குள் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அமராவதியோடு விசாகப்பட்டினம், கர்னூலையும் நிர்வாக நகரங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.


பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்திருந்தார். அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டிணம் நிர்வாக தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் அமைக்கப்படும் என கூறப்பட்டது.


ஆனால் அமராவதியை தலைநகராக நிர்மாணிக்க இடம் கொடுத்த விவசாயிகளும், பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் 3 தலைநகர் முடிவுக்கு ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து அம்மாநில சட்டப்பேரவையில் 11 மணிக்கு கூடிய சிறப்பு கூட்டத்தொடரில், 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 175 இடங்களை கொண்ட சட்டப்பேரவையில் 151 உறுப்பினர்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வைத்திருப்பதால், அங்கு இந்த மசோதா நிறைவேறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை.


ஆனால் 58 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டமேலவையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 3 தலைநகர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 28 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவும் அக்கட்சிக்கு இருப்பதால், மேலவையில் இம்மசோதா நிறைவேறுவது சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.