டெல்லி கவர்னராக அனில் பைஜால் நியமனம்
முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அனில் பைஜல் டெல்லி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அனில் பைஜல் டெல்லி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி துணை நிலை கவர்னராக இருந்த நஜீப் ஜங் கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, புதிய கவர்னரை நியமிப்பதற்காக நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொண்டது. உள்துறை அமைச்சகத்தின் செயலராக இருந்த, ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அனில் பைஜலை கவர்னராக நியமிக்க பிரதமர் அலுவலகம் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது.
பைஜல் நியமனத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் வழங்கினார். இவர் டிசம்பர் 30-ம் பதவி ஏற்கிறார்.
அது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டிவீட் செய்தார்:
1969 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நஜீப் ஜங் தனது ராஜினாமா கடிதத்தை கடந்த 22-ம் தேதி சமர்ப்பித்தார். அவர் டெல்லி துணை நிலை ஆளுநராக மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
அவரது பதவி காலத்தில் டெல்லி நிர்வாகத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவருக்கும் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே நிழல் போர் நடந்தது. இந்த சூழ்நிலையில்தான் தனது பதவியை நஜீப் ஜங் ராஜினாமா செய்துள்ளார்.
நஜீப் ஜங்கின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது.
பிரணாப் முகர்ஜி, நஜீப் ஜங்கின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதோடு, புதிய ஆளுநராக பைஜாலை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.