ஆந்திராவில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக புதிய மசோதாவை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கல் செய்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது, பள்ளி மற்றும் உயர்கல்வியை ஒழுங்குபடுத்தும் விதமான மசோதா ஒன்றை சட்டப்பேரவையில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கல் செய்தார். 


இதில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை முறைப்படுத்துதல், கல்வியின் தரத்தை அதிகரித்தல் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. அதோடு இதுதொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.


இந்த மசோதாவில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தல், கல்வியின் தரத்தை அதிகரித்தல் போன்றவை இந்த மசோதாவின் முக்கிய அம்சமாக உள்ளது. இதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக்கள் பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிக்கும். இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, "ஆந்திர மாநிலத்தில் கல்வி ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். கல்விக் கட்டணத்தைத் தாண்டி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வியின் தரம், மாணவர்கள் சேர்க்கை போன்றவற்றையும் இந்தக் குழு கண்காணிக்கும் என தெரிவித்தார். அதே போல் நமது கட்சிக்காரர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைவரும் சொந்தமாக கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.


அவற்றில் LKG, UKG வகுப்புகளுக்கு லட்சக்கணக்கில் கூட பணம் வசூலிக்கப்படுகிறது. இனி ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது. அதைத் தடுக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெகனின் அதிரடி அறிவிப்பால் ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த கல்வி நிறுவனங்களும் ஆந்திர மாநிலத்தில் கல்வி நிறுவனங்களை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநில முதல்வரின் செயல்பாடுகளை கண்டு பல்வேறு மாநில முதல்வர்களும் வியப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.