பீகார் பாஜக எம்.பி ரமா தேவியை மக்களவையில் அவமதித்து பேசிய சமாஜ்வாதி எம்.பி ஆசாம் கான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வியாழன் அன்று முத்தலாக் மசோதா மீதான விவாதம் நடைபெற்ற போது தற்காலிக சபாநாயகராக பீகார் மாநில பாஜக எம்.பி ரமா தேவி அவைத்தலைவர் இருக்கையில் இருந்தார்.


அப்போது ரமா தேவியின் ஆணைக்குறிப்பு ஒன்றைக் கேட்டதும் சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆசாம் கான் பாலின ரீதியில் மரியாதை குறைவாக பேசினார்.


இதற்கு மக்களவை உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆசாம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். குறிப்பாக பெண் எம்.பிக்கள் ஆசாம் கானுக்கு எதிராக கட்சி பேதமின்றி குரல் எழுப்பினர்.


இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜயாதேவ் கல்லா, தானிஷ் அலி, சுப்பிரியா சுலே உள்ளிட்டவர்களிடம் ஆசாம் கான் விவகாரம் குறித்து ஆலோசனை  நடத்தினார்.


ஆலோசனை கூட்டத்தில் பீகார் எம்.பி ரமா தேவியை அவதூறாக பேசியதற்கு ரமாதேவியிடம் ஆசாம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா அவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.


இதனையடுத்து உடனடியாக ரமா தேவியிடம் மன்னிப்பு கேட்கும்படி ஆசாம் கானிடம் சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார். மீறினால் கடும் விளைவுகள் சந்திக்க நேரும் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார்.