இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் பறந்து தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று முதல் முறையாக பறந்தார். பெங்களூரு, எலஹங்கா விமானப்படை தளத்தில் 12-வது சர்வதேச விமான கண்காட்சி நேற்று முதல் நடைப்பெற்று வருகிறது.


இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று, 2 பேர் பயணிக்க கூடிய தேஜஸ் போர் விமானத்தில், பிபின் ராவத் பறந்தார். இவரை அடுத்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பி.எஸ்.ராகவன் இன்று மாலை இந்த விமானத்தில் பறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விமானத்தில் பறந்த பின்னர் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்ட  ராணுவ தளபதி இதுகுறித்து தெரிவிக்கையில்... "தேஜஸ் விமானத்தில் பறந்தது, எனது வாழ்க்கையில் கிடைத்த பெரிய அனுபவம். சிறப்பான அனுவம், நமது படையில் இணையும், விமானப்படையில் பலம் அதிகரிக்கும்" என தெரிவித்தார்.


தேஜஸ் விமானம், அளவில் சிறியது. விரைவாக இயக்கக்கூடிய திறன் பெற்ற சூப்பர்சோனிக் போர் விமானம். பெரிய போர் விமானங்கள் கொண்டு செல்லும் நவீன ஆயுதங்களை, தேஜஸ் கொண்டு சென்று, எதிரிநாட்டு விமானங்கள், இலக்குகளை தாக்க முடியும் என ராணுவ துறை தெரிவித்துள்ளது.


தேஜஸ் ஏற்கனவே IAF - Gaganshakti 2018 மற்றும் Vayushakti 2019 இரண்டு பெரிய பயிற்சிகளில் பங்கேற்றுள்ளது. தேஜஸ் போர் விமானம் முன்னுதாரணமான சுறுசுறுப்பு மற்றும் சூழ்ச்சி கொடுக்கும் திறன் கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல் உள்நாட்டு விமானம் ஆகும். மேலும் இது ஒரு நான்காவது தலைமுறை போர் விமானம் மற்றும் தற்போது உலகின் லேசான சூப்பர்சோனிக் ஜெட் என புகழப்படுகிறது.