மெலினா டிரம்ப் பங்கேற்கும் டெல்லி பள்ளி நிகழ்ச்சியிலிருந்து கெஜ்ரிவால், சிசோடியா நீக்கம்?
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவின் பெயர்கள் மெலனியா டிரம்ப் நிகழ்வில் இருந்து கைவிடப்பட்டதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் குற்றம் சாட்டின.
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவின் பெயர்கள் மெலனியா டிரம்ப் நிகழ்வில் இருந்து கைவிடப்பட்டதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் குற்றம் சாட்டின.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வரவுள்ளனர். இந்த இரண்டு நாள் பயணத்தின் போது புது டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களை விசிட் செய்கிறார் டிரம்ப் மற்றும் அவரது மனைவி.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்து கொள்ளும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்காக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் வாகனத்தில் டிரம்பும், பிரதமர் மோடியும் பேரணியாக செல்கின்றனர். இரு தலைவர்களுக்கும் அகமதாபாத் மக்கள் வரவேற்பளிக்கின்றனர். அவரது வருகைக்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையில் டெல்லியில் அரசு பள்ளி ஒன்றை மெலினா ட்ரம்ப் பார்வையிடுகிறார். அப்போது அரசு பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் மாநில துணை முதல்வரும், கல்வித்துறை அமைச்சர் மணிஷ் சிசோடியாவும் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் மெலினா டிரம்ப் பங்கேற்கும் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிசோடியா தான் பள்ளி மாணவர்களிடையே மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகிழ்ச்சி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்படத்தக்கது.