டெல்லி மாசை கட்டுப்படுத்த Odd-even கட்டுப்பாடு தொடரும் - கெஜ்ரிவால்!
டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து வருவதால், Odd-even கட்டுப்பாடுகள் தொடரும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!
டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து வருவதால், Odd-even கட்டுப்பாடுகள் தொடரும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!
புதுடெல்லி: தேசிய தலைநகரில் காற்றின் தரம் 'கடுமையான' வகைக்கு மோசமடைந்து வருவதால், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை நகரத்தில் செயல்பட்டு வரும் ஒற்றைப்பட -சமமான வாகன எண் திட்டத்தை விரிவாக்குவது குறித்து சூசகமாக தெரிவித்தார்.
தலைநகர் டெல்லி தற்போது சுவாசிக்க முடியாமல் திணறி வருகிறது. உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் காற்று மாசு அளவு ஆபத்து அளவை அங்கு எட்டி இருக்கிறது.
இந்நிலையை சமாளிக்க ஒற்றைப்பட - சமமான வாகன எண் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது ஒற்றை இலக்க தேதிகளில் ஒற்றை இலக்க எண் கொண்ட கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும். இரட்டை இலக்க தேதிகளில் இரட்டை இலக்க எண் கொண்ட கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும். இந்நிலையில், இந்த திட்டம் வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், தேவைப்பட்டால் வாகன கட்டுப்பாடு திட்டம் மேலும் நீட்டிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ANI-இடம் கூறுகையில்; "தேவைப்பட்டால், ஒற்றைப்பட -சமமான வாகன எண் திட்டத்தை நாங்கள் நீட்டிக்க முடியும்," என்று கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறினார். டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சியை நீடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை நிலவரப்படி 467 குறியீடு என்ற அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசின் தரக்குறியீடு, 0 - 50 புள்ளிகள் வரை இருந்தால், ஆபத்தில்லை என கருதப்படுகிறது. அது, 201 - 400 புள்ளிகள் வரை இருந்தால் மிக மோசமான நிலை என்றும், 500 புள்ளிகளை தாண்டினால் அதிதீவிர அபாய நிலை என்றும் குறிப்பிடப்படுகிறது. கடந்த 2-ம் தேதியன்று டெல்லியில் காற்று மாசின் தரக்குறீயீடு அளவு, 533 புள்ளிகள் என்ற அதிதீவிர அபாய கட்டத்தை தொட்டது.