குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் உள்ள முதல்வர் இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 


பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில், கடந்த 2016ம் ஆண்டு, மத்திய பாஜக அரசு கொண்டுவந்த திருத்தங்களை, மாநிலங்களவை நிராகரித்ததால், அது நிறைவேற்றப்படவில்லை.


இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மத்திய பாஜக அரசு, நடப்பு நாடாளுமன்ற தொடரில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை, கடந்த திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து, நேற்று மாநிலங்களவை கூடியபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டார். 


இந்நிலையில் நேற்று இரவு  நடைபெற்ற போராட்டத்தின் போது, லக்கிநகர் பகுதியில்  உள்ள  அசாம் முதல்வர் இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீச்சில், சில ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.