அசாமில் வெள்ளத்தால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு; மீட்பு பணி தீவிரம்
அசாம் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டதில் சுமார் 3 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்ல ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குவஹாத்தி: அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமின் கோக்ராஜர் மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மோசமடைந்து வரும் சூழ்நிலையில், இப்போது இந்திய இராணுவ வீரர்கள் உள்ளூர் நிர்வாகத்துடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், மேகாலயா போன்ற கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரம்மபுத்ரா நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆதிகாரபூர்வ தகவலின்படி, தெற்கு அசாமில், வெள்ளத்தின் பிடியில் சுமார் ஒரு லட்சம் பேர் சிக்கியுள்ளனர். அதே நேரத்தில், அசாமின் கோலகாட், லக்கிம்பூர், தேமாஜி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த அறிக்கையின்படி, வெள்ளம் ஏற்பட்டதில் சுமார் 3 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர் எனக் கூறப்பட்டு உள்ளது.
மேலும் அண்டை நாடான பூட்டானில் இருந்து வரும் அதிக மழை நீர் காரணமாக, அசாமின் சிராங் மாவட்டத்தில் உள்ள சம்பாவதி ஆற்றின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சிராங் மாவட்டத்தின் அமின்பாரா கிராமத்தில், இராணுவம் மீட்புக்குழு மூலம் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 39 பேரை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
மறுபுறம், கோக்ராஜாத் மாவட்டத்தின் கங்கியா நதியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. கொக்ராஜர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிலைமையை மதிப்பாய்வு செய்து வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய மீட்பு பணிகளை விரைவுபடுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.