சட்டப்பேரவை தேர்தல்: பஞ்சாப், கோவாவில் வாக்குப்பதிவு துவங்கியது
பஞ்சாப், கோவாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பஞ்சாப்:-
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து இக்கூட்டணியே ஆட்சி செய்து வருகிறது. மேலும் களத்தில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகளும் உள்ளன.
காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவால் இந்த முறை பிரசாரத்தில் ஈடுபடவில்லை. பஞ்சாப் மாநில காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகசார்பில் பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சி தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்படுவார் என தெரிகிறது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கேஜ்ரிவால் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டார்.
மொத்தமுள்ள 117 தொகுதி களில் 1,145 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் கூட்டணியில் சிரோமணி அகாலி தளம் 94 இடங்களிலும் பாஜக 23 இடங்களிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 112 இடங்களில் போட்டியிடுகிறது.
காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர்.
கோவா:-
40 தொகுதிகளை கொண்ட கோவாவில் லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. கடந்த முறை பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மகராஷ்டிரவாடி கோமந்த கட்சி, கோவா குரக்ஷா மஞ்ச் ஆகியவை சிவசேனா கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றன. இங்கு பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையேதான் மும்முனை போட்டி நிலவுகிறது. இங்கு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித் ஷா, மத்திய அமைச்சரும், கோவா முன்னாள் முதல்வருமான மனோகர் பாரிக்கர் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர்.
கோவா தேர்தல் களத்தில் மொத்தம் 251 வேட்பாளர்கள் உள்ளனர். கோவாவில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக சட்டப்பேர வைத் தேர்தல் நடைபெறுகிறது.
காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். பனாஜியில் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் வரிசையில் நின்று ஓட்டளித்தார்.
ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.