மக்களவையில் அசாம் கான் எம்.பி.யாக இருக்க தகுதியற்றவர் என அவரது பாலியல் கருத்து குறித்து பீகார் பெண்கள் குழு தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை  மசோதா மீதான விவாதம் நேற்றுமுன் தினம் நடைபெற்றது. சபாநாயகர் இருக்கையில் ரமா தேவி அமர்ந்து சபையை நடத்திக் கொண்டிருந்தபோது, முத்தலாக் மசோதாவுக்கு எதிராக ஆசம் கான் பேசினார். அப்போது, கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, சக எம்.பிக்களின் குறுக்கீடு அதிகமாக இருப்பதாக ஆசம் கான், ரமா தேவியிடம் புகார் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த ரமா தேவி, குறுக்கீடுகளை கவனத்தில் கொள்ளாமல் தம்மைப் பார்த்து பேசுமாறு கோரினார். 


அப்போது, ரமா தேவிக்கு எதிராக ஆசம் கான் ஆபாசமாகப் பேசத்துவங்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரமா தேவி, தனது வார்த்தையை திரும்பப் பெற வேண்டும் என ஆசம் கானை வலியுறுத்தினார். ஆசம் கானின் பேச்சுக்கு பாஜக எம்.பிக்களும் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். தனது பேச்சை திரும்பப் பெற மறுப்பு தெரிவித்த ஆசம் கான், தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும், அவ்வாறு பேசியதாக நிரூபித்தால் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும் கூறியிருந்தார். 


இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர்,  ஆசம் கானுக்கு எதிராக அனைத்து உறுப்பினர்களும் ஒரே குரலில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆசம் கானுக்கு எதிராக சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 


தனது பேச்சுக்கு ஆசாம் கான் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இல்லையென்றால் அவரை சபாநாயகர் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்  வலியுறுத்தினார். பின்னர் பேசிய நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் ஆதிர்  ரஞ்சன் சவுத்ரி, பெண்கள்  அவமதிக்கப்படுவதை தங்கள் கட்சி தொடர்ந்து எதிர்க்கும் என தெரிவித்தார். ஆசம் கானுக்கு எதிராக திரினாமூல் காங்கிரஸ் எம்.பி மிமி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பேசினர். ஆசம் கான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.  


இதையடுத்துப் பேசிய சபாநாயகர ஓம் பிர்லா, ஆசம் கான் பேசிய பேச்சு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என தெரிவித்தார். ஆசம் கான் மீது எத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி  அதில் முடிவு செய்யப்படும் என்றும் மக்களவை சபாநாயகர்  கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்து வரும் நிலையில், அசாம் கானின் பாலியல் பாலியல் கருத்து குறித்து பீகார் மகளிர் ஆணையத்தின் தலைவி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; "இந்த சம்பவம் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். மக்களவை சபாநாயகர் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வோம். பெண்களை மதிக்க முடியாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் அமைச்சராக  இருக்க தகுதியற்றவர்" என அவர் தெரிவித்தார்.