அசாம் கானின் அறிக்கை அவர் மன வக்கிரத்தால் அவதிப்படுவதை நிரூபிக்கின்றன என அசாம் கானின் பாலியல் கருத்து குறித்து சுஷ்மா ஸ்வராஜ் கருத்து!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவையில் நேற்று முன்தினம் முத்தலாக் தடை மசோதா குறித்து விவாதம் நடந்தது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் இல்லை. இதனால் சபாநாயகர் இருக்கையில் பாஜக எம்பியும் துணை சபாநாயகருமான ரமாதேவி அமர்ந்து இருந்தார்.


அப்போது சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கான் பேசும் போது "நான் உங்களை மிகவும் விரும்புகிறேன், எல்லா நேரத்திலும் உங்கள் கண்களைப் பார்ப்பது போல் உணர்கிறேன்," என்று கூறி ஆரம்பித்தார். இதனால் அவையில் இருந்த எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, ஆசம் கான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கூச்சலிட்டனர்.


ஆனால் ஆசம் கான் ரமா தேவியிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனிடையே இந்த விவகாரம் நேற்று லோக்சபாவில் விஸ்வரூபம் எடுத்தது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அசிங்கமாக பேசிய அசாம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் . அவரது பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது தொடர்பாக அசாம் கான், ரமா தேவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மட்டுமின்றி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மக்களவையில் கோரிக்கை விடுத்தன. 


இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அந்த வகையில் இது தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில்,  அசாம் கான் மக்களவையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.


இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘‘அசாம் கான் மனநல பாதிப்பால் அவதிப்படுகிறார் என்பதை நிரூபிக்கும் வகையிலான அறிக்கைகளை வெளியிடுவதில் பெயர் பெற்றவர். ஒரு பெண் தலைவரிடம் உரையாற்றும் போது அவர் கூறிய கருத்து அனைத்தும் கட்டுப்பாடு வரம்புகளை தாண்டியது. மக்களவையில் சபையின் கண்ணியம் மற்றும் நல்லொழுக்கம் பாதுகாக்க அவர் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்’’ என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.