3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகள் ஏதும் தொடங்கப்படாது -பார் கவுன்சில்!
புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்குவதை மூன்று வருடங்களுக்கு நிறுத்திவைப்பதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்குவதை மூன்று வருடங்களுக்கு நிறுத்திவைப்பதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இந்திய பார் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பார் கவுன்சில் உறுப்பினர் வேத் இப்ரகாஷ் சர்மா, காளான்கள் போல சட்டக்கல்லூரிகள் முளைப்பது பற்றிய பிரச்சினையை எழுப்பினார். இதுகுறித்தி கவுன்சில் விவாதித்து எடுத்த முடிவு., "நாட்டில் தற்போது 1,500 சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. வக்கீல்களுக்கு பற்றாக்குறையும் இல்லை. இப்போதுள்ள கல்லூரிகளில் இருந்து ஆண்டு தோறும் வெளிவரும் வக்கீல்களே போதுமான அளவில் உள்ளனர்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் சில மாநிலங்களின் மந்தமான நடவடிக்கையால் பல கல்லூரிகள் சரியான கட்டமைப்பு இல்லாமல் செயல்படுகின்றன. மாநில அரசுகள் அரசு சட்டக்கல்லூரிகளில் சட்ட ஆசிரியர்களை நியமிப்பதில் எப்போதாவது தான் கவனம் செலுத்துகின்றன.
சட்டக்கல்லூரிகள் தொடங்க மாநில அரசுகள் தடையில்லா சான்றுகள் கொடுக்கின்றன. பல்கலைக்கழகங்களும் பொறுப்பற்ற முறையில் அதற்கு அனுமதி கொடுத்துவிடுகின்றன. பெரும்பாலான ஊரக பகுதிகளில் சட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை பல்கலைக்கழகங்களால் தடுக்க முடிவதில்லை. மாநில அரசுகளும் இந்த முறைகேடுகளை தடுப்பதில் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.
90% சட்ட கல்லூரிகள் தங்கள் தரத்தை உயர்த்த எந்த மானியமும் பெறுவதில்லை. எல்.எல்.எம். அல்லது பிஎச்.டி. பட்டம் பெறுவது மிக சுலபமாகிவிடுகிறது. இந்த காரணத்தால் நாட்டில் நல்ல சட்ட ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக் குறை உள்ளது. எல்.எல்.எம்., பிஎச்.டி. பட்டங்கள் இந்திய பார் கவுன்சில் கட்டுப்பாட்டில் இல்லை.
கடந்த 2016-ஆம் ஆண்டு 2 வருடங்களுக்கு புதிய சட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் தொடங்க மாநில அரசுகளும், பல்கலைக்கழகங்களும் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். அதேசமயம் இருக்கும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினோம்.
எனினும் அதன்பின்னரும் 300 தடையில்லா சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய பார் கவுன்சில் அனுமதி மறுத்ததும் சிலர் நீதிமன்றங்களுக்கு சென்றனர். உயர்நீதிமன்றமும் பரிசீலிக்கும்படி கூறியுள்ளதால் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் பற்றி பரிசீலித்து வருகிறோம். எனவே புதிதாக கல்லூரிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை ஊக்குவிக்கும் எண்ணம் இல்லை.
தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் தவிர 3 வருடங்களுக்கு புதிய சட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்குவது நிறுத்திவைக்கப்படுகிறது. இந்த 3 வருடங்களில் உரிய உள்கட்டமைப்பு அல்லது ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவரும் சட்ட கல்லூரிகள் முடக்கப்படும். மாநில அரசுகளும், பல்கலைக் கழகங்களும் 4 மாதங்களுக்குள் காலியான சட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுடன், சட்ட தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.