பெங்களூரு: 115 ஆண்டுக்குப்பின் வரலாறு காணாத மழை, 19 பலி
கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று, இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
பெங்களூருவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. பல்வேறு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கர்நாடகாவில் தொடர்மழையால் மாநிலத்தின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. தொடர் மழையால் பல மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பெங்களூருவில் கடந்த 45 நாட்களாக கனமழை பெய்த வரும் நிலையில், மேலும் 3 நாட்களுக்கு மழை கொட்டும் என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் கனமழை காரணமாக ஆங்காங்கே மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தது. போக்குவரத்தும் முடங்கியது. இந்த மழைக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், சுவர் இடிந்தும், கால்வாயில் விழுந்தும் 19 பேர் பலியானார்கள். மேலும் பெங்களூரில் 115 ஆண்டுக்குப்பின்பு வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 16.15 செ.மீ. மழை கொட்டியது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு 16.06 செ.மீ. மழை பெய்தது.