மத்திய அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்தத்தால் போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதை 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டன. 


இதில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உட்பட ஐந்து சங்கங்கள் பங்கேற்றுள்ளன.  


இதன்படி நாடு முழுவதும் 25 கோடி ஊழியர்களும், அத்துடன், மின்சாரத்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். கல்வியை வணிக மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து 60 மாணவர் சங்கங்களும்  விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்கக் கோரி 175 விவசாயிகள் சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


கடந்த 2-ஆம் தேதி தொழிற்சங்க தலைவர்கள் வேலைநிறுத்த நோட்டீசை அளித்ததும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் அதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. 


தொழிலாளர் மாநாடு இறுதியாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அதன்பின்னர் 2015 ஆகஸ்டு மாதத்தில் தொழிலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகள் பற்றி பேசுவதற்காக மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இதுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


தேசநலனுக்கும், வளர்ச்சிக்கும் விரோதமாக பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் மற்றும் பிற தேசிய சொத்துகளை தனியார்மயமாக்குவதிலும், விற்பதிலும் அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது. 12 விமான நிலையங்கள் ஏற்கனவே தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது. பி.எஸ்.என்.எல்.-எம்.டி.என்.எல். இணைப்பின் மூலம் 93 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு என்ற பெயரில் வேலை இழந்துள்ளனர். ரயில்வேயை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.


எனவே மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 


இதனிடையே, தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகளை தங்கு தடையின்றி இயக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மருத்துவ விடுப்பு தவிர, பிற விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. பணிக்கு வராத ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்‍கப்பட்டுள்ளது.இதே போன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வரவேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது என்றும்  இன்று பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தால் போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.