SEC Adani Bribery Scandal Case Full Details: இந்தியாவின் பெரும் கோடீஸ்வரராக, தொழிலதிபராக அறியப்படுவர் கௌதம் அதானி. அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால், இந்திய பங்குச்சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் கடும் சரிவை கண்டுள்ளன. சுமார் 2.25 லட்சம் கோடி ரூபாய் அளவில் பங்குகள் சரிவை கண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை கென்ய அரசு ரத்து செய்திருக்கிறது. 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மின்சாரம் கடத்தும் பாதைகளை அமைப்பதற்காக கென்ய நாட்டின் எரிசக்தி அமைச்சகம் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அந்நாட்டு அதிபர் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார். மின்சாரம் தொடர்பான ஒப்பந்தம் மட்டுமின்றி விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட இரண்டு ஒப்பந்தங்களையும் கென்யா நாட்டு அரசு ரத்து செய்திருக்கிறது.


 ரூ.2000 கோடி லஞ்சம்?


இவை அனைத்திற்கும் அதானி குழுமம் இந்திய அதிகாரிகளுக்கு வழங்கிய சுமார் ரூ.2000 கோடிக்கும் மேலாக (256 மில்லியன் அமெரிக்க டாலர்) லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளே காரணமாகும். இந்த வழக்கு குறித்தும், அதன் பின்னணி குறித்தும் இங்கு காணலாம்.


மேலும் படிக்க | ரூ.2,100 கோடி லஞ்சம்: குற்றச்சாட்டுகளுக்கு அதானி மறுப்பு


SECI அதாவது Solar Energy Coporation Of India என்றழைக்கப்படும் இந்த நிறுவனம் 2011ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. சூரிய ஒளி மின்சார திட்டங்களைச் செயல்படுத்தும், அதேபோல், மாநில மின்வாரியங்களுக்கு தேவையான சூரிய ஒளி மின்சாரத்தையும் இது பெற்றுத் தரும். இந்த SECI நிறுவனத்துடன்தான் அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு பல்வேறு திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்தி வருகிறது.


SECI மூலம் ஒப்பந்தம்


இந்த திட்டங்களுக்காக அதானி குழுமம் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் முதலீடுகளை குவித்துள்ளது. தற்போது SECI நிறுவனத்துடன் ஆந்திரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் அரசுகள் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட அதானி குழுமம் அரசு அதிகாரிகளுக்கு 256 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில், அதாவது சுமார் ரூ.2000 கோடி அளவில் லஞ்சம் கொடுத்துள்ளது. இதுதான் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.


அமெரிக்காவில் வழக்கு


அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியிலிட்டுள்ள Adani Green Power, Azure Power ஆகிய நிறுவனங்கள் சுமார் ரூ.2000 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க வங்கிகளில் இருந்தும், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்தும் கடனாகவும் மற்றும் கடன் பத்திரங்கள் மூலமாகவும் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருந்தாலும், இதில் அமெரிக்க முதலீட்டாளர்கள் தலையீடு இருப்பதால் இந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றமே விசாரிக்கும். இது அந்நாட்டின் சட்டமாகும். அதே நேரத்தில் பிடிவாரண்ட் பிறக்கப்பட்டாலும் கௌதம் அதானி கைதாவற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.


இதனால், கௌதம் அதானி (62), சாகர் எஸ் அதானி (30), வினீத் ஜெயின் (53), ரஞ்சித் குப்தா (54) சிரில் கபேன்ஸ் (50) சவுரப் அகர்வால் (48) தீபக் மல்ஹோத்ரா (45) மற்றும் ரூபேஷ் அகர்வால் (50) ஆகியோர் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் ஜெயின் ஆகியோர் மீது கடன் பத்திர மோசடி, கடன் பத்திர மோசடி சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும், கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீது அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைய சிவில் வழக்கிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் குற்றச்சாட்டுகள் என்றும், குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள் என்றும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.


ஆந்திராவுக்கு பெரிய தொகை?


2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு காலகட்டம் வரையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா, சத்தீஸ்கர், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் மின்வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அவர்களுக்கான சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தத்தை பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


இதில் ஆந்திராவில் மட்டும் 2.3 கிகாவாட் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தத்தை பெற ஆந்திர அதிகாரிக்கு மட்டும் 228 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகிறது. மற்ற மாநிலங்களை விட ஆந்திராவுக்கு பெரிய தொகை கைமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதானி குழுமம் லஞ்சம் மூலம் கைப்பற்றி உள்ள இந்த ஒப்பந்தங்கள் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.16 ஆயிரம் கோடி) அளவில் வருவாய் ஈட்ட முடியும் எனவும் அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ரூ.2,100 கோடி லஞ்சம்: குற்றச்சாட்டுகளுக்கு அதானி மறுப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ