Caste Census | மண்டல் 2.0: மாற்றம் வருமா? பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு! அஞ்சும் பாஜக!
Bihar Caste Survey Data: நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பி உள்ள பீகார் மாநில சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசுக்கு தலைவலியாக மாறிவிட்டது. அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: பீகாரில் நிதிஷ் குமார் அரசு நேற்று (அக்டோபர் 02, 2023, திங்கள்கிழமை) சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது. நாட்டிலேயே இதுபோன்ற சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்ட முதல் மாநிலம் என்ற பெருமையை பீகார் பெற்றுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மண்டல் அறிக்கை 2.0 என்று அழைக்கப்படுகிறது. மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் நாட்டில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீட்டிற்காக 1990 இல் அமல் படுத்தப்பட்டன. 33 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் விவாதத்துக்கு வந்துள்ளது. பீகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை வந்த பிறகு அரசியலும் சூடுபிடித்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் சமூக நீதி, இட ஒதுக்கீடு விவகாரம் பெரிய புயலைக் கிளப்ப உள்ளது. கடந்த ஜூலை 18ம் தேதி பெங்களூருவில் நடந்த எதிர்க் கட்சிகளின் கூட்டணியான இந்தியா (I.N.D.I.A) தரப்பில், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதுக்குறித்து கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்
காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், அப்பொழுது தான் சமூகநீதி நிலைநிறுத்த முடியும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 'பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன மக்கள், பட்டியல் பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கூறி வருகிறார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை சமீபகாலமாக தொடந்து பேசி வருகிறார்.
சமூக நீதி பேசும் ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, செல்லும் இடமெல்லாம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, சமூக நீதி, இட ஒதுக்கீடு அவசியம் குறித்து தெளிவாக பேசி வருகிறார். நாடு தழுவிய அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய மோடி பயப்படுகிறார். அதை காங்கிரசால் மட்டுமே முடியும் என ராகுல் காந்தி கூறி வருகிறார்.
பீகார் மாநில சாதிவாரி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் வெளியானதை அடுத்து, அதுக்குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "பிகாரில் OBC + SC + ST சேர்த்து 84% என்று சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது. மத்திய அரசின் 90 செயலாளர்களில், 3 பேர் மட்டுமே OBC வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்தியாவின் பட்ஜெட்டில் 5% மட்டுமே கையாளுகின்றனர். எனவே, இந்தியாவின் சாதிப் புள்ளி விவரங்களை அறிந்து கொள்வது அவசியம். அதிக மக்கள் தொகை, அதிக உரிமைகள், இது எங்கள் உறுதிமொழி என்று எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தார்.
சூடுபிடிக்கும் ஓபிசி அரசியல்
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, பாஜகவுக்கு எதிராக டிரம்ப் சீட்டை சரியான நேரத்தில் நிதிஷ் குமார் விளையாடியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மண்டல் கமிஷன் காலத்திற்குப் பிறகு ஓபிசி அரசியலை சூடுபிடிக்க இந்தியா (I.N.D.I.A) கூட்டணி புதிய வழியை வழங்கியுள்ளது. பாஜகவுக்கு எதிராக ஓபிசி மக்கள் குரல் எழுப்ப தொடங்கி விட்டனர்.
மேலும் படிக்க - AIADMK Vs BJP: டெல்லியில் அண்ணாமலை.. அமைதியாக இருங்கள்.. எச்சரித்த மேலிடம்!
அதே நேரத்தில், பீகார் மாநில சாதிவாரி அறிக்கை தவறானது என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அழுத்தமும் பா.ஜ.கவுக்கு அதிகரித்து வருகிறது. மண்டல் அறிக்கை 2.0 மூலம் வட இந்தியாவில் போராட்டம் வெடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போராட ஆரம்பித்தால், அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் பாஜகவுக்கு ஏற்பட்டு உள்ளது. இதை பாஜக எப்படி கையாளப்போகிறது என்று பொறுத்திருந்தது பார்ப்போம்.
1941-ளில் சாதிவாரி கணக்கெடுப்பு - 92 ஆண்டுகள் பழமையான தரவு
நாட்டில் கடைசியாக 1931-ம் ஆண்டுதான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டது. இருப்பினும், 10 ஆண்டுகளுக்குப் பிறகும், அதாவது 1941 இல், சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, ஆனால் புள்ளிவிவரங்கள் பகிரங்கப் படுத்தப்படவில்லை. அதாவது 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் நாட்டில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 92 ஆண்டுகள் பழமையான தரவுகளின்படி, நாட்டில் 52 சதவீத ஓபிசி சமூகம் உள்ளது. அதே சமயம், சுதந்திரத்துக்குப் பிறகு 1951-ல் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான கோரிக்கை எழுந்தபோது, சமூகத்தின் கட்டமைப்பைக் கெடுக்கும் என்று அப்போதைய அரசு அதை நிராகரித்தது. அதன்பிறகு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவை எடுக்காமல் மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக மண்டல் கமிஷன்
1979ல், பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்டது. இந்த கமிஷன் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. நாட்டில் ஓபிசி வகுப்பினரின் எண்ணிக்கை 52 சதவீதம் என்று ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு அரசு வேலைகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மண்டல் கமிஷனுக்கு பிபி மண்டல் (Bindheshwari Prasad Mandal) தலைமை தாங்கினார். இந்த ஆணையம் 1980 ஆம் ஆண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்து. 1990 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. மண்டல ஆணையத்தின் அறிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. 2011 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ (UPA) அரசாங்கமும் சமூக-பொருளாதாரக் கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால் அதன் தரவுகளை வெளியிடவில்லை.
மேலும் படிக்க - மக்களவையில் 454-2 பெரும்பான்மையுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது!
ஓபிசி மக்களுக்காக உருவாக்கப்பட்ட காக்கா காலேல்கர் கமிஷன், மண்டல் கமிஷன்
1953 ஆம் ஆண்டு ஓபிசி விவகாரத்தில் காக்கா காலேல்கர் கமிஷன் (Kaka Kalelkar Commission) அமைக்கப்பட்டது. அதில் 2399 பிற்படுத்தப்பட்ட சாதிகள் அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பல குறைபாடுகள் காரணமாக, ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. பின்னர் டிசம்பர் 20, 1978 இல் மொராஸ்ஜி தேசாய் அரசாங்கம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது. இது மண்டல் கமிஷன் என்று அழைக்கப்பட்டது. ஜனவரி முதல் கமிஷன் பணியைத் தொடங்கியது. இது தவிர, துணைப்பிரிவு தொடர்பாக நீதிபதி ரோகினி கமிஷனும் 2017ல் உருவாக்கப்பட்டது. இந்த கமிஷன் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. எனினும், இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
பீகார் மாநில சாதிவாரி புள்ளி விவரம்
பீகார் அரசின் தரவுகளின்படி, மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.07 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் மிகவும் பின்தங்கிய வகுப்பினர் (36 சதவீதம்) அதிகமாக உள்ளனர். அதன்பிறகு, இதர பிற்படுத்தப்பட்டோர் 27.13 சதவீதம். பட்டியல் சமூகத்தினர் 19.65 சதவீதம், பட்டியல் பழங்குடி சமூகத்தினர் 1.68 சதவீதம் மற்றும் உயர் சாதியினர் 15.52 சதவீதம் உள்ளனர். மேலும், ஓபிசி சமூகத்தில் யாதவ் தான் பெரிய சாதி என்றும் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் 14.27 சதவீதம் யாதவர்கள் உள்ளனர். பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 63.1 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகும். மேலும் மாநிலத்தில் இந்துக்களின் மக்கள் தொகை 81.99 சதவீதம் மற்றும் முஸ்லிம் மக்கள் தொகை 17.70 சதவீதம் உள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் அனைத்து சாதியினரும் பயனடைவார்கள்
நேற்று (திங்கள்கிழமை) சாதிவாரி புள்ளிவிவரங்கள் வெளிவந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், "இந்த சர்வே 'மண்டல் பார்ட் 2' என என்ற கேள்வியைத் தவிர்த்தார். இதுபோன்ற கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்வது பொருத்தமாக இருக்காது என்று கூறினார். நாளை (செவ்வாய் கிழமை) அனைத்துக் கட்சிகளுடனும் புள்ளி விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். மக்கள் தொகைக்கு ஏற்ப, அந்தந்த சமூகத்திற்கு கொள்கைகளை உருவாக்குவதில் எங்கள் கவனம் இருக்கும். விதிவிலக்கு இல்லாமல் அனைத்து சாதியினரும் கணக்கெடுப்பின் மூலம் பயனடைவார்கள். மாநில சட்டமன்றத்தில் முன்னிலையில் உள்ள மற்றும் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்த ஒன்பது கட்சிகளின் பிரதிநிதிகள் முன் கணக்கெடுப்பு தரவு வைக்கப்படும். பீகாரின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான நம்பிக்கையை உயர்த்தும் என்றும் நிதிஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்தியில் புதிய ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு வழி திறக்கும் என்றார். மத்தியில் புதிய அரசு அமையும் போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். சமீபத்தில், பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில், மத்தியில் ஆட்சி அமைந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்க் கட்சியினர் உறுதியளித்தனர். எதிர்க்கட்சி கூட்டணியான ஐ.என்.டி.ஐ.ஏ (I.N.D.I.A) அமைப்பதில் லாலு மற்றும் நிதிஷ் இருவரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
சாதிவாரி தரவுகளை பாஜக ஆய்வு செய்யும்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாஜக அதிருப்தி தெரிவித்துள்ளது. பீகார் பாஜக மாநிலத் தலைவர் சாம்ராட் சவுத்ரி, இந்த கணக்கெடுப்புக்கு தனது கட்சி ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில், தற்போது வெளியிடயிடப்பட்ட தரவுகளை மதிப்பீடு செய்யப்படும் என்றும் கூறினார்.
ஒரே ஒரு முடிவால் உயர்சாதியினருக்கு 'வில்லன்' ஆக்கப்பட்ட நாட்டின் ஹீரோ வி.பி.சிங்
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி.சிங் அமல்படுத்தினார். அவரது முடிவு நாட்டின் அரசியலையே மாற்றியது. உயர் சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் வீதியில் இறங்கி வன்முறைப் போராட்டங்கள் நடத்தினர். இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராடிய இயக்கத்தின் தலைவரான ராஜீவ் கோஸ்வாமி தற்கொலை செய்து கொண்டார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை காங்கிரஸ் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தபோது, பாஜக அழுத்தமாக எதிர்ப்பும் எதுவும் தெரிவிக்காமல் அரசியல் சூழ்ச்சியுடன் தன்னை ஓரம் கட்டியது. விபி அரசின் முடிவை காங்கிரஸும் எதிர்த்தது. நாட்டில் மண்டல் கமிஷனை அமல்படுத்திய போதிலும், வி.பி. சிங் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவராக ஒருபோதும் மாற முடியவில்லை என்றும், அவர் உயர் சாதியினரின் பார்வையில் வாழ்நாள் முழுவதும் வில்லனாகவே இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க - அயோத்தியில் இருந்து 2-ம் கட்ட யாத்திரை: ராகுல் காந்தி திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ