பீகார் நாளந்தா பல்கலைக்கழகத்தில் 98 வயதில் முதுகலை பட்டம் பெற்ற முதியவர்!!
பீகார் நாளந்தா பல்கலைக்கழகத்தில் 98 வயது நிறைந்த முதியவர் ஒருவர் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார்.
கல்வி கற்க வயது ஒரு தடை இல்லை என்பதற்கு உதாரணமாக 98 வயது முதியவர் ஒருவர் நாளந்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார். இந்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
பாட்னாவில் நேற்று நடந்தபட்டமளிப்பு விழாவில் அவருக்கு, மேகாலயா கவர்னர் கங்காபிரசாத் பட்டம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் நீண்ட காலம் கடினமாக உழைத்தேன். எனது முதுகலை படிப்பை நிறைவு செய்துள்ளேன் என்பது தற்போது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதைதொடர்ந்து,பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.பி.சின்கா இந்த பல்கலைக்கழகத்தில் 98 வயதில் பட்டம் பெறும் முதல் முதியவர் ராஜ்குமார் வைஸ் தான் என்று கருத்து தெரிவித்தார்.
இவர், கடந்த 1938–ம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்து, வக்கீலுக்கு படித்துள்ளார். அதன் பின்னர் வேலைக்கு சென்றதால் முதுகலை பட்டம் பெறவில்லை. தனது வாழ்நாளில் எப்படியாவது முதுகலை பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று கனவு கண்ட ராஜ்குமார் வைஸ், கடந்த 2015–ம் ஆண்டு நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ.) படிப்பில் சேர்ந்து தற்போது பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
மேலும், தள்ளாடும் வயதில் நடக்க கூட இயலாத ராஜ்குமார் வைஸ், 3 சக்கர வண்டியில் வந்து தனது பட்டத்தை பெற்றது அனைவரின் மத்தியிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.