பீகார்: நக்சல் வைத்திருந்த கண்ணி வெடிகுண்டு வெடித்து சி.ஆர்.பி.எப் வீரர் 10 பேர் பலி
பீகாரில் நக்சலைட்டுகள் தீவிரவாதிகள் வைத்திருந்த ஐஇடி வகை கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 10 கமாண்டர்கள் வீர மரணமடைந்தனர்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள சக்கர்பந்தா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் வைத்திருந்த கண்ணி வெடிகுண்டு நேற்று இரவு வெடித்தது. இச்சம்பவத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீசார் 8 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் வனப்பகுதியில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட போது உயிரிழந்தனர். பல போலீசார் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் நக்சலைட்டுகள் 3-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.