சமோசாவை ஆன்லைனில் ஆர்டர் செய்த டாக்டர்... மோசடியில் சிக்கி ரூ. 1.40 லட்சம் காலி - அது எப்படி?
Cyber Crime: ஒரு மருத்துவர் 25 பிளேட் சமோசவை ஆன்லைன் ஆர்டர் செய்தபோது, வங்கி கணக்கில் இருந்து 1. 40 லட்ச ரூபாயும் ஆன்லைன் மோசடியால் பறிபோனது. அந்த மோசடி குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
Cyber Crime: தற்போதைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துவிட்டன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் மோசடிகள் அதிகம் பதிவாகி வருகின்றன. ஆன்லைன் மோசடி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் சாதரண மக்கள் இதில் பெரும் தொகையை இழக்க நேரிடுகிறது.
அந்த வகையில், சமீபத்தில் புதிய மோசடி சம்பவமாக மும்பையின் குடிமை நிர்வாகத்தால் நடத்தப்படும் KEM மருத்துவமனையில் பணிபுரியும் 27 வயது மருத்துவர் ஒருவர், சியோன் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இருந்து 25 பிளேட் சமோசாக்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ததில், ஒரு ஆன்லைன் மோசடியில் சிக்கி ரூ.1.40 லட்சத்தை இழந்தார் என போலீஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
என்ன நடந்தது?
மருத்துவர், தனது சகாக்களுடன் சேர்ந்து, கர்ஜத் என்ற பகுதிக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்திருந்தார், மேலும் அவர்களின் பயணத்திற்கு சமோசாக்களை ஆர்டர் செய்யவும் முடிவு செய்தார். ஆன்லைனில் ஒரு உணவகத்தின் தொடர்பு எண்ணைக் கண்டறிந்த பிறகு, அவர் அதில் ஆர்டர் செய்துள்ளார். தொலைபேசி எண்ணை அழைத்தபோது, ஆர்டரை பெற பதிலளித்த நபர் 25 சமோசாக்களுக்கு 1,500 ரூபாய் முன்பணமாகக் கேட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான ஆர்டரை உறுதிசெய்தல் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணைக் கொண்ட வாட்ஸ்அப் செய்தி மருத்துவருக்கு வந்தது. இந்த ஆன்லைன் செயல்முறையை நம்பி, மருத்துவர் கொடுக்கப்பட்ட கணக்கிற்கு ரூ.1,500 பரிவர்த்தனை செய்தார். மறுமுனையில் இருந்த நபர், பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை ஐடியை உருவாக்குமாறு மருத்துவரிடம் கூறியுள்ளார். இதை நம்பி அவர் சொல்லியதை செய்துகொண்டிருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக, மருத்துவரின் கணக்கில் இருந்து திடீரென 28,807 ரூபாய் காணாமல் போனது. இதையடுத்து, கணக்கில் இருந்த மொத்தத் தொகையான ரூ. 1.40 லட்சமும் பரிபோனது.
மேலும் படிக்க | பெங்களூருவில் ஜூலை 17-18 தேதிகளில் காங்கிரஸ் தலைமையில் கூடும் 24 எதிர் கட்சிகள்...!
வழக்குப்பதிவு
இச்சம்பவம் கடந்த வாரம் காலை 8.30 மணி முதல் 10.30 மணியளவில் நடந்தது. பாதிக்கப்பட்டவர் போய்வாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார், மேலும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.
கோவை சம்பவம்
மும்பையில் நடந்த இதே சம்பவத்தை போன்று கடந்த மாதம் கோயம்புத்தூரிலும் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது, 10, 12ஆம் வகுப்பில் தேர்வான மாணவர்களின் பெற்றோரை குறிவைத்து இந்த ஆன்லைன் மோசடி நடத்தப்பட்டது. அதில், அவர்களின் குழந்தைக்கு பெரிய ஊக்கத்தொகை வழங்குவதாக கூறி, அவர்களிடம் தொடர்புகொண்டுள்ளனர். பின்னர், அதற்கு சிறு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி, வாட்ஸ்அப்பில் ஒரு க்யூ-ஆர் கோடையும் அனுப்பியிருக்கின்றனர்.
அதில் பணம் செலுத்திய பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் பறிபோயுள்ளது. 10க்கும் மேற்பட்டோரிடம் இந்த மோசடி நடந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து, அந்த மோசடி கும்பலையும் அவர்கள் கைது செய்தனர். அப்போது போலீசார் தெரிவிக்கையில், கோவையில் மோசடியில் ஈடுபட்ட இந்த கும்பல் டெல்லி சென்று அங்கிருக்கும் மோசடி கும்பலிடம் பயிற்சி பெற்று இந்த மோசடி செய்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதுபோன்ற மோசடியில் சிக்காமல் தப்பிக்க, சமீபத்திய ஆன்லைன் மோசடிகள் மற்றும் மோசடிகளைப் பற்றி தொடர்ந்து அறிந்துகொள்ளுங்கள். முதலீட்டு திட்டங்கள், லாட்டரி அல்லது பரிசு மோசடிகள், காதல் மோசடிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மோசடிகள் போன்றவற்றில் எச்சரிக்கையாக இருங்கள்.
மேலும் படிக்க | மீன் சாப்பிட்ட விவேகானந்தர்... சர்ச்சையை கிளப்பிய இஸ்கான் துறவிக்கு தடை - யார் இவர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ