இந்து மதத்தை விட்டு வெளியேறிவர்களை மீண்டும் மதமாற்ற வேண்டும்: பாஜக எம்.பி சர்ச்சை
மதமாற்றத் தடைச் சட்டம், தற்போதைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாதது என்ற காரணத்திற்காக கொண்டுவரப்பட்டது என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
புது டெல்லி: இந்து மதத்திற்கு மீண்டும் மாறுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் செழிக்க வேண்டுமானால், இந்தியா இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடாக மாற வேண்டும் என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா தேசிய தலைவரும், எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, இந்துக்களை மதமாற்றம் செய்வதை நிறுத்தினால் மட்டும் போதாது, ஆனால் இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் மதம் மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மதசார்பற்ற நாட்டில் மதத்திற்கு முன்னுரிமை அளித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில் உள்ள ஸ்ரீ ஆத்மர் மடத்தின் பரியாமத்தின் நிறைவு நிகழ்ச்சியான விஸ்வர்பணம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய அவர், இந்து மதத்தின் மத மற்றும் கலாச்சாரத்தை காப்பாற்ற ஒரு மறுமாற்ற செயல்முறையை உருவாக்குவது அவசியம் என்று வலியுறுத்தி பேசினார்.
இந்துக்கள் அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்று தேஜஸ்வி சூர்யாகூறினார். ஜனநாயகத்தில் அரசியல் அதிகாரத்தை எண்ணிக்கையின் பலம் தீர்மானிக்கும் அதே வேளையில், மக்கள்தொகை ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கிறது. இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் மதம் மாற்றுவதுதான் இந்துக்களுக்கு இருக்கும் ஒரே வழி. இந்து மதம் புத்துயிர் பெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கோயிலும் மடமும், மறுமாற்ற செயல்முறையை மேற்கொள்ள இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று எம்.பி தேஜஸ்வி சூர்யா குறிப்பிட்டார்.
கர்நாடக வரலாற்றின்படி, வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய இஸ்லாத்தின் படையெடுப்பை முதலில் விஜயநகர இராச்சியம் வெற்றிகரமாகச் சமாளித்தது என்று அவர் கூறினார். விஜயநகர ஆட்சியாளர்கள் "Mlechchas" ஐ விரட்டியடித்தனர், அவர் இஸ்லாமிய படையெடுப்பு காலத்தை குறிப்பிடுகிறார். இந்துத்துவா இல்லாமல் இந்து இருக்க முடியாது என்றார். இந்து மதத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இந்துத்துவா சித்தாந்தம் கிளர்ச்சியை போதிக்கின்றது என்றார்.
இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்திலிருந்து வலுக்கட்டாயமாக மாற்றப்பட்ட முன்னோர்களின் தலைமுறை மக்கள் என்று கூறினார். மதமாற்றத் தடைச் சட்டம், தற்போதைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாதது என்ற காரணத்திற்காக கொண்டுவரப்பட்டது என்றார்.
இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தால் மட்டுமே ஜனநாயகம் நிலைத்து வளர முடியும். அரசியலமைப்புச் சட்டம், "இந்தியா அது பாரதம்" என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. மேலும், இந்தியா அதன் அசல் சாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாக இருக்க வேண்டும் என்றும் பேசினார்.
கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தேஜஸ்வி சூர்யா இப்படிப் பேசியது பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR