17-வது மக்களவையின் சபாநாயகராக பதவியேற்றார் ஓம் பிர்லா!
17-வது மக்களவையின் சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்!
17-வது மக்களவையின் சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்!
மத்தியில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஓம் பிர்லா அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படதாக நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
57-வயது ஆகும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் முன்மொழிந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மாலை வரை எதிர்க்கட்சி சார்பில் எந்த வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை. ஓம் பிர்லாவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன.
எனவே, ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அவர் சபாநாயகராக பொறுப்பேற்றார். அவரை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய சபாநாயகராக பதவியேற்ற ஓம் பிர்லாவை வாழ்த்திய பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாராளுமன்றத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம். அவருக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிப்போம். பிர்லா சிறப்பாக செயல்படுவார் என்பது இங்கிருக்கும் பெரும்பாலான எம்பிக்களுக்கு தெரியும். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்” என்றார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மூன்று முறை எம்எல்ஏ-வாகவும், இரண்டு முறை எம்பி-யாகவும் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.