கருப்பு பணம்: ரூ.2,000 மேல் நிதிபெற தடைவிதிக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை
அரசியல் கட்சிகள் பெயர் கூறாதவர்களிடம் இருந்து 2000 ரூபாயிக்கு மேல் நிதிபெற தடைவிதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி: அரசியல் கட்சிகள் பெயர் கூறாதவர்களிடம் இருந்து 2000 ரூபாயிக்கு மேல் நிதிபெற தடைவிதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து, மின்னணு முறையிலான பண பரிவர்த்தனையை முன்னெடுக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல்களில் கருப்பு பணம் விளையாடுவதை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் முக்கியமான சிபாரிசை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது.
நாட்டில் அரசியல் கட்சிகள் அனுப்பியவரின் பெயர் கூறாமல், அநாமதேயமாக வருகிற நிதி நன்கொடைகளை பெறுவதற்கு அரசியல் சாசனமோ, பிற சட்டங்களோ எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை. இருப்பினும் 1951-ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 29 சி-யின்படி அநாமதேயமாக வருகிற நிதி நன்கொடைக்கு முறைமுகமான தடையானது உள்ளது. அதுவும் வருகிற ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட நன்கொடைகள் குறித்து சுய வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளது.
இந்நிலையில் அரசியல் கட்சிகள் பெயர் கூறாதவர்களிடம் இருந்து ரூபாய் 2 ஆயிரத்துக்கு மேல் நிதியாக நன்கொடை பெறுவதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறுகிற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா நேற்று முன்தினம் பேசுகையில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பெறும் வருமானத்துக்கு வருமான வரிச்சட்டம் 13 ஏ பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த கட்சிகள் தங்கள் வங்கி கணக்குகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து இருந்தால் அந்த தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வருமானத்துக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், அவற்றின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரி சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று கூறியது.
கட்சிகள் பெறும் நன்கொடை ரூ.20 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், நன்கொடை கொடுத்தவரின் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை சேகரித்து பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
வருமான வரி சட்டம் பிரிவு 13-ஏ, அரசியல் கட்சிகளுக்கு வீடு போன்ற சொத்துக்கள், நன்கொடைகள், மூலதன வருவாய்கள், பிற இனங்களில் வருகிற வருவாய் போன்றவற்றுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நன்கொடை அளிக்கும் நபர்களை பதிவு செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.