பீகாரில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்வு; மத்திய - மாநில அரசு தோல்வி
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்பு. பீகார் மாநிலத்தில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
பாட்னா / முசாபர்பூர்: கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. தற்போது இந்த நோயின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை காய்ச்சல் காரணமாக இதுவரை 63 குழந்தைகள் இறந்துள்ளனர். மருத்துவர்களின் அறிக்கைப்படி, இந்த இறப்பு இரத்தச் சர்க்கரைக் குறைபாடு காரணமாக ஏற்படுகின்றன. எல்லா குழந்தைகளும் இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு ஆளாகியுள்ளன. இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து வருவதால், எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையற்றதாக மாறும். அதனால் இறப்பு ஏற்ப்படுகிறது எனக் கூறியுள்ளனர். முசாபர்பூரில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் இதுவரை 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆறு குழந்தைகளும், கேஜ்ரிவால் மருத்துவமனையில் மூன்று குழந்தைகளும் இறந்துள்ளனர் எனத் தெரிவிக்ப்பட்டு உள்ளது.
மேலும் எஸ்கேஎம்சிஎச் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் ஒன்பது குழந்தைகளின் நிலமை மோசமாக உள்ளது. அதேபோல கேஜ்ரிவால் மருத்துவமனையில் ஐந்து குழந்தைகளின் நிலை மோசமாக உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
பீகார் சென்றுள்ள மத்திய நிபுணர் குழு பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அங்கு பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். பின்னர், வெள்ளிக்கிழமை முதல் மேலும் ஆறு ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும் என்றும், 100 படுக்கைகள் கொண்ட புதிய வார்டு விரைவில் தொடங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பால் பீதி அடைந்துள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்றும் சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறும், உரிய சிகிக்சை அளிக்கும்படியும் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.