புகார்: இந்திய ஆயுத தரகருக்கு 10 மில்லியன் யூரோ லஞ்சம்
இங்கிலாந்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், ஆயுத தரகருக்கு 10 மில்லியன் யூரோ லஞ்சமாக கொடுத்ததாக தகவல் வந்துள்ளது.
இது தொடர்பாக பிபிசியில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது:- இந்தியா விமானப்படை பயிற்சிக்காக பயன்படுத்தும் ஹாக் ரக போர் விமானங்களில் இன்ஜின்கள் பொருத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை பெற, சுதிர் சவுத்ரி என்ற ஆயுத தரகருக்கு 10 மில்லியன் யூரோ பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுதிர் சவுத்ரி தான் லஞ்சம் வாங்கியதை தனது வழக்கறிஞர் மூலம் மறுத்துள்ளார். மேலும் அவர் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை எனவும், இடைத்தரகராகவும் செயல்படவில்லை எனவும் கூறியுள்ளார். லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் டிம் பரோன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆலோசகராக சவுத்ரி செயல்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதிகாரிகள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம். இது தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது சுனில் சவுத்ரி இந்திய அரசின் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் லண்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.