கன்னட மொழியும் கன்னட கலாச்சாரமுமே தங்களுக்கு முக்கியம் அதை எப்போது நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா திட்டவட்டம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா, "இந்தியாவில் பல மொழிகள் இருப்பதாகவும், அதில் ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை, ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழியாகத்தான் இருக்குமென்றும், மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டுமென தாம் விரும்புவதாகவும்" அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 


அமித் ஷா-வின் இந்த கருத்துக்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கன்னட மொழியும் கன்னட கலாச்சாரமுமே தங்களுக்கு முக்கியம் என்று பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; "நமது நாட்டில் அதிகாரப்பூர்வமாக உள்ள அனைத்து மொழிகளும் சமமானவை. கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம் தான் முதன்மையான மொழி. கன்னடத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். கன்னடத்தையும், கலாசாரத்தையும் மேம்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.