பாக்., உளவாளியுடன் தொடர்பு; மகாராஷ்டிர ராணுவ வீரர் கைது!
பாக்கிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை தெரியபடுத்தியதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்!
பிராஜ்பூர்: பாக்கிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை தெரியபடுத்தியதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்!
ஷெயிக் ரியாஜுதின் என அடையாளம் காணப்பட்டுள்ள இவர் பாக்கிஸ்தான் நாட்டு உளவாளிக்கு, இந்திய எல்லை தொடர்பான புகைப்படங்களை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். எல்லைப் பாதுகாப்பு படையின் 29-வது பட்டாலியனுக்கான துணை கமாண்டோ, எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் பேரில் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஷெயிக் ரியாஜுதின் மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், இவர் தனது முகப்புத்தகம் மற்றும் இன்னபிற சமூக ஊடகங்களின் வாயிலாக பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்புடைய மிர்ஸா பைசலுக்கு ரகசியத் தகவல்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லைப் பகுதியில் தகவல் தொடர்புக்கான இணைப்புகளை பதிப்பது, தெருக்களுடைய கேமரா பதிவுகள், அதிகாரிகளின் தகவல் தொடர்பு எண்கள் உள்ளிட்டவற்றை ஷெயிக் ரியாஜுதின் உளவாளியுடன் பகிர்ந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து அலுவலக ரகசியச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ், ஷெயிக் ரியாஜுதின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஷெயிக் ரியாஜுதின் வசமிருந்து இரண்டு செல்போன்கள், 7 சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.